என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் வாக்குமூலம்"
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ். வீட்டின் அருகே நகை கடை வைத்துள்ளார். சந்தோஷ், தனது வீட்டில் லாக்கரில் இருந்த தங்க நகைகள், வெள்ளி மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டதாக கொருக்குப்பேட்டை போலீசில் 7-ந் தேதி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். சந்தோஷ் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.
மேலும் சந்தோஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளைபோனதால் அவருடைய வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 26), சந்தோஷிடம் வேலை பார்த்து வந்ததும், டிசம்பர் மாதம் அவரை வேலையில் இருந்து நிறுத்தியதும் தெரியவந்தது.
அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா பகுதியில் சென்று கொண்டு இருப்பது தெரிந்தது. பின்னர் ஹன்ஸ்ராஜின் புகைப்படத்தை முகநூலில் இருந்து எடுத்த போலீசார், தென்மத்திய ரெயில்வே போலீஸ் கமாண்டர் ஜி.வி.குமாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஆந்திர போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்துக்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது அந்த ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு தப்பிச்செல்ல முயன்ற ஹன்ஸ்ராஜ், அவருடைய தம்பி ஹரேந்திரசிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4½ கோடி மதிப்பிலான நகை, வெள்ளி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார், விஜயவாடா சென்று கைதான 2 பேரையும் சென்னை அழைத்து வந்தனர்.
நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தது ஏன்? என கைதான ஹன்ஸ்ராஜ் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-
நான், 3½ ஆண்டுகளாக சந்தோஷ் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்தேன். அவர் 3 மாதத்துக்கு ஒரு முறை சம்பளத்தை மொத்தமாக கொடுப்பார். நான், மாதந்தோறும் சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதால் என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷிடம் எனது சம்பள பாக்கியை கேட்டேன். அவர் தர மறுத்து விட்டார். இதனால் நான், பெங்களூரு சென்று அங்கிருந்த எனது தம்பி ஹரேந்திரசிங்குடன் சேர்ந்து சந்தோசை பழிவாங்க திட்டம் தீட்டினேன். அதன்படி 6-ந்தேதி எனது தம்பியுடன் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தேன். அன்று இரவு எனது தம்பியுடன் சந்தோஷ் வீட்டுக்கு சென்றேன்.
ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் என்பதால் சந்தோஷ் வீட்டின் சாவியை வைக்கும் இடத்தில் இருந்து எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றோம். பின்னர் அங்கு இருந்த 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றோம்.
பின்னர் கோயம்பேட்டில் இருந்து வாடகை காரில் விழுப்புரம் சென்று, அங்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி உத்தரபிரதேசம் தப்பிச் செல்ல முயன்றோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அறிந்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் கைதான கொள்ளையர்கள், மீட்கப்பட்ட தங்க நகை, வெள்ளி மற்றும் பணத்தை பார்வையிட்டனர். கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு, வெகுமதி வழங்கினர். அப்போது துணை கமிஷனர் ரவளிபிரியா கந்தபுனேனி உடன் இருந்தார்.
விழுப்புரம்:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர் கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபவிழாவை பார்க்க மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவண்ணாமலை சென்றார்.
இவர் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையம் சென்றடைந்தது. அப்போது அதில் பயணம் செய்த ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் மகள் ரம்யா விழுப்புரம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்-திருக்கோவிலூர் இடையே ஓடும் ரெயிலில் யாரோ மர்ம மனிதர் அவரை கழுத்தை அறுத்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் 2 செல்போன்களையும் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கொலையாளியை பிடிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. செந்தில்குமாரி, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார்தாகூர் ஆகியோர் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருச்சி சுப்பிரமணியன், மதுரை மன்னர்மன்னன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ‘சைபர்கிரைம்’ போலீசாரின் உதவியுடன் ராஜேஸ்வரியின் செல்போன் இருக்கும் இடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவண்ணாமலையில் அது இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் பின்னர் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை சென்றனர். அங்கு தேனிமலை பகுதியில் நின்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தார்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதனால் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது அவர் திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆனந்தன் (37) என்பது தெரிந்தது. மேலும் ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் போலீசில் ஆனந்தன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் கூலித்தொழிலாளி. தினமும் திருவண்ணா மலையில் இருந்து விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயிலில் சென்று வேலை செய்து வந்தேன். சம்பவத்தன்று வேலை முடிந்து விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றேன். அப்போது நான் இருந்த பெட்டியில் மூதாட்டி ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அவர் மூக்குத்தி அணிந்திருந்தார். அதை பறிக்க திட்டமிட்டேன். பின்னர் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியிடம் சென்று மூக்குத்தியை கழற்றி கொடு. இல்லையென்றால் குத்தி கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். ஆனால் அவர் மூக்குத்தியை கழற்றி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கழுத்தை அறுத்து கொன்றேன்.
பின்னர் அவர் அணிந்திருந்த ½ பவுன் மூக்குத்தியை பறித்தேன். மேலும் அவர் வைத்திருந்த 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனால், போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து ஆனந்தனை போலீசார் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆனந்தன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சதீஷ் (வயது 22) நேற்று முன்தினம் ஏற்காட்டில் கைது செய்யப்பட்டார். அரூர் கொண்டுவரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தருமபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான வாலிபர் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-
எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். தீபாவளி சமயத்தில் ஊருக்கு வந்தபோது அவரை சந்தித்து தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) என்ற வாலிபர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். 19-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சதீசையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வேலூர் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் தண்டர்சீப், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மதன்ராஜ், அமீர்தாசுல்தான் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். 3 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் முதலில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது போக்சோ சட்டப்பிரிவோடு, பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு மாற்றம் குறித்த சட்ட மாறுதல் அறிக்கையும் இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தாக்கல் செய்து உள்ளார். குற்ற பத்திரிகையில் வழக்கு மாற்றம் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கனவே மாணவி இறப்பதற்கு முன்பு 6-ந் தேதி ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் மீண்டும் இந்த வழக்கில் புகார் மனு கொடுத்து உள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது மகள் மலம் கழிக்க சென்றபோது சதீஷ், ரமேஷ் ஆகியோர் தன்னை கெடுத்ததாக கூறினார். இந்த விவரங்களை கடந்த 6-ந் தேதி பெண் உதவி ஆய்வாளர் விசாரித்தபோது பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதை சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். இன்று எனது மகள் இறந்துவிட்ட நிலையில் என் மகளின் சாவுக்கு சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மாணவியின் தந்தை அண்ணாமலை புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி சட்ட மாறுதல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார்.
மாணவியின் புகாரை பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக் கிருஷ்ணன் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியக்கோடி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அவர் மலை கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். விரைவில் அவர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் முடிவு செய்வார்கள். #dharmapurigirlstudent #girlmolested
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள மோட்டூரான்கொட்டாய் வீராட்சிகுப்பம் கஞ்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன் (வயது38). விவசாயி.
இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு சவுமியா (15), சரண்யா (13) என்கிற மகள்களும், சரவணன் (11) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கல்லாவி அருகே உள்ள கல் குண்டு இடத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் கோதண்டன் தலை பகுதி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
மர்மமான முறையில் அவர் இறந்து கிடக்கும் தகவலை அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் உடனே அங்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரெயில்வே போலீசார் இந்த வழக்கு தொடர்பாக கல்லாவி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கோதண்டன் தலையில் மர்ம நபர்கள் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை டி.எஸ்.பி. அர்ஜூனன் தனிப்படை அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
நேற்று சந்தேகத்தின் பேரில் வீராட்சிகுப்பத்தை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்கிற பழநேசன் (27) மற்றும் அவரது நண்பர் கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பழனிவேல் என்கிற பழநேசன் விஜயலட்சுமியிடன் ஏற்பட்ட கள்ளகாதலுக்கு கோதண்டன் இடையூறாக இருந்ததால் தனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் கொலை செய்தது அவர்கள் தான் என்று தெரியவந்தது.
மேலும் தொடர்ந்து பழனிவேல் என்கிற பழநேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கோதண்டனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் கருந்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட நான் விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டேன். இதுகுறித்து தகவலறிந்த கோதண்டன் என்னிடம் வந்து தனது மனைவியை சந்திக்க கூடாது என்று கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கோதண்டனை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று நானும் எனது நண்பர்கள் சக்திவேல், ராஜா, மாது ஆகியோருடன் மது குடித்தோம். பின்னர் 4 பேரும் சேர்ந்து கோதண்டன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று அவரை கல்குண்டு அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு குண்டு கட்டாக தூக்கி கொண்டு வந்தோம். அங்கு வைத்து கோதண்டன் வாயில் மதுவை ஊற்றினோம்.
மதுகுடித்த அவர் அங்கேயே மயங்கி கிடந்தார். உடனே நான் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கோதண்டன் உயிர் இழந்தார். உடனே நானும் எனது நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம் என்று கூறினார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா, மாது ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளத்தொடர்புக்கு குறுக்கே இருந்ததால் விஜயலட்சுமியின் கணவரை கல்லைபோட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்டையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடியை சேர்ந்தவர் பெருமாள். இவர் கோவையில் செப்டிங் டேங்க் வண்டியின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முருகேஸ்வரி, குழந்தைகளுடன் சீரகாப்பாடிக்கு வந்து விட்டார். சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள டெய்லரிங்கடையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு, பரமகுடியை சேர்ந்த அருள் என்கிற அருள்செல்வம் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் பெருமாளின் உறவினர்கள் சமாதானம் செய்து பெருமாளையும், முருகேஸ்வரியையும் சேர்த்து வைத்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி பெருமாள் திடீரென மாயமானார். பின்னர், அவர் இறந்த நிலையில் உடல் வீரபாண்டி ஏரியில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பெருமாளை கொலை செய்து விட்டதாக கூறி, கடந்த வாரம் அருள்செல்வம் பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். நேற்று முன்தினம் முதல் அவரை ஆட்டையாம்பட்டி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அருள் செல்வம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கார்மென்ட்ஸ் கடையில் வேலை செய்தபோது முருகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை பார்த்தவுடனே, அவரது அழகில் நான் மயங்கினேன். அவரை, எப்படியாவது எனது வலையில் வீழ்த்தி விட வேண்டும் என எண்ணினேன். இது முருகேஸ்வரிக்கு தெரியாது. தவறான கண்ணோட்டத்தில் பழகுவது குற்றம் என தெரிந்தும் பழகினேன்.
முருகேஸ்வரி தனது குடும்பம் விஷயம் குறித்தும், கணவரை பற்றியும் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். ஒரு நாள் அவர், தனியாக கார்மென்ட்ஸ் கடை தொடங்கப்போகிறேன். இதற்கு தேவையான உதவிகளை செய்ய முடியுமா? என கேட்டார். ஏற்கனவே, அவரது அழகில் மயங்கிய நான், அவர் உதவிகேட்டவுடன் மறுக்கவில்லை. உதவிகள் செய்து கொடுத்தேன்.
ஊரில் உள்ளவர்களுக்கு எங்களது தொடர்பு பற்றி தெரிய தொடங்கியது. அவர்கள் முருகேஸ்வரிக்கு அறிவுரை கூறினார்கள். அருள்செல்வத்தை நம்பாதே உன்னை ஏமாற்றுகிறான் என்றனர். என் மீது ஒரு கட்டத்தில் முருகேஸ்வரிக்கும் சந்தேகம் ஏற்பட்டது. நான் ஏமாற்றுவதாக அறிந்தார். இதனால் என்னிடம் இருந்து விலக தொடங்கினார். இருந்தாலும் நான் அவரை விடவில்லை.
இந்த நிலையில் திடீரென பெருமாளுடன் சேர்ந்து கொண்ட அவர், என்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பழி வாங்கவே பெருமாளை எனது வீட்டிற்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
சென்னையில் இருந்து வந்த எனது நண்பர் உசிலம்பட்டி பால் பாண்டியுடன் சேர்ந்து பெருமாளின் உடலை வீரபாண்டி ஏரியில் கல்லை கட்டி வீசினோம். பின்னர் நாங்கள் இருவரும் தலைமறைவாகி விட்டடோம். ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்ததை அறிந்ததும் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறியதாக தெரிகிறது.
கொலைக்கு துணையாக இருந்த உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்